தமிழர் சுயநிர்ணயத்திற்கான விடுதலைப் போராட்டம்: 20 ஆண்டுகளுக்குப் பிறகு
உலகளாவிய புலம் பெயர் தமிழரின் சமூக, அரசியல் சமத்துத்துவத்தை நடைமுறைப் படுத்தவதற்காகப் பயங்கரவாத பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை நீக்குவதன் முக்கியத்துவம்.
2002 ஆம் ஆண்டு; தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் மற்றும் இலங்கை அரசுக்கும் (GOSL) இடையே நோர்வேயின் அனுசரணையுடன் கைச்சாத்திடப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு 20 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு, கனேடிய தமிழ் அமைப்புகள் ஒரு மகாநாட்டை ஏற்பாடு செய்துள்ளன. இம் மகாநாடு கீழ்காணும் விடயங்களைக் கவனத்தில் எடுத்து ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
ஈழத் தமிழரின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிடப்பட்டதன் தாக்கமும் அதன் விளைவும்.
2009 ல், விடுதலைப்புலிகள் இயக்கம் ஆயுதங்களை மௌனித்ததன் பின்பும் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலின் கீழ் தடை நீடிப்பு தொடர்தல்.
ஈழம் வாழ் தமிழர் உரிமைகளுக்காகப் புலம்பெயர்ந்த நாடுகளில் சனநாயக அடிப்படையில் போராடி வரும் தமிழர்கள் மேல், விடுதலைப் புலிகளின் மீதான தடை தொடர்ந்து புதுப்பித்தல் ஏற்படுத்தும் களங்கத்தையும் மற்றும் பாகுபாட்டையும் புறக்கணிப்பையும் புரிந்துகொள்ளல்.
1948 இல் பிரிட்டிஷ் குடியேற்ற ஆட்சியாளர்கள் இலங்கையை விட்டு வெளியேறியதிலிருந்து, அப்பாவித் தமிழ் பொதுமக்கள், அவ்வப்போது திட்டமிடப்பட்ட படுகொலைகளுக்கு உட்படுத்தப்பட்டதன் விளைவாக ஆயிரக் கணக்கில் கொல்லப்பட்டனர். மூன்று தசாப்தங்களாக, இன அழிப்புக்கு எதிரான, தொடர் அகிம்சைப் போராட்டங்கள் தோல்வியுற்ற நிலையில், 1976-77 ஆம் ஆண்டில், தமிழர், தம் பூர்வீக நிலமான வடக்கு-கிழக்கு இணைந்த தமிழீழம் எனும் நாட்டை, சனநாயக முறையில் உருவாக்க முடிவு செய்தனர். சனநாயக அடிப்படையில் தமிழரால் வழங்கப்பட்ட உறுதியான இந்த ஆணையானது, 1977, 1981, மற்றும் 1983 ஆம் ஆண்டுகளில், தமிழருக்கு எதிரான விரோதப் படுகொலைகளை, மறைமுகமாக ஊக்குவித்ததன் மூலம் சிங்களத் தலைமையிலான அரசுகளால் எதிர் கொள்ளப்பட்டது.
அகிம்சை வழியிலான அரசியல் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டிருந்த தமிழ் இளைஞர்கள் மீது, தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்திருந்த, பெரும்பான்மைச் சிங்களவர்களைக் கொண்ட இராணுவத்தினால் பெரும் எண்ணிக்கையிலான கைதுகள், சித்திரவதைகள், கண்மூடித்தனமான தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இது தமிழ் மக்களின் ஆதரவுடன், சர்வதேச மட்டத்தில், தமிழரின் சுயநிர்ணய உரிமைக்காக இலங்கை அரசிற்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகள் தோன்றுவதற்கு வழிவகுத்தது, இவ்வாறாக பொது மக்களின் ஆதரவுடன் 1990 களின் காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழ பாதுகாப்புப் படையாக பரிணமித்ததன் காரணமாக போராட்டமானது (GOSL) சிறீலங்கா அரசபடைகளுக்கும் (LTTE) தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ்மக்கள் பாதுகாப்புப் படைகளுக்கும் இடையில் நடைபெற்றது. அதேவேளை தமிழ் மக்களின் பெரும் ஆதரவுடன், தமது கட்டுப்பாட்டில் இருந்த தமிழர் தாயகப் பகுதிகளில், பல பொது நிர்வாகச் (சிவில்) செயல்பாடுகளுக்கும் பொறுப்பான, உண்மையான ஒரு நடைமுறை அரசாகவும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு பரிணமித்தது.
2002 க்குள் இராணுவச் சமநிலையை அடைந்த பிறகு, விடுதலைப் புலிகள், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் ஜப்பானின் ஆதரவுடன் நடுவராக செயற்பட்ட நோர்வே அரசாங்கத்தால் சர்வதேச ரீதியான முன்னெடுப்பாக செயல்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டின் வழி போர் நிறுத்த ஒப்பந்தத்தில் நுழைந்தனர். 2003 ஆம் ஆண்டு நிலவரப்படி, விடுதலைப் புலிகள் இடைக்கால தன்னாட்சி வரைபு (ISGA) எனும் முன்மொழிவை சர்வதேச அளவில் அமைதிக்கான சமாதான செயல்முறையின் ஒரு பகுதியாக முன்வைத்தனர்.
விடுதலைப் புலிகள் மீது, சிறிலங்கா அரசினால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும், 2004 இல் சுனாமியால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சிறிலங்கா முழுவதற்கும் உதவி செய்வதற்காக விடுதலைப் புலிகள் தம்மையே அணிதிரட்டினர். விடுதலைப் புலிகளின் மீது எந்த வன்முறையும் இல்லாததை பொருட்படுத்தாமல், 2006 ஆம் ஆண்டில், கனடா மற்றும் ஐரோப்பிய யூனியன், அமைதி செயல்முறையை பாதிக்கும் வகையில்,புலிகளைத் தங்கள் பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்துக் கொண்டன. இது இலங்கை அரசுக்குச் சாதகமாக, சமநிலையைச் சாய்த்து, தமிழர்களுக்கு எதிரான இனப் அழிப்பை முன்னெடுப்பதற்கு பச்சைக்கொடி காட்டியது. இதனால் 2008 இல், விடுதலைப் புலிகளுடனான சர்வதேச-நல்லிணக்க போர் நிறுத்த ஒப்பந்தத்தை இலங்கை ஒருதலைப்பட்சமாக உடைத்து, தமிழர் தாயக, மக்கள் வாழ்விடப் பகுதிகளில் கண்மூடித்தனமான இன அழிப்பு தாக்குதலைத் தொடங்கியது. தமிழர் தாயகமான தமிழீழ அரசு என்பது மே 2009 இல் அழிக்கப்பட்டதுடன், விடுதலைப் புலிகள் ஆயுதங்களை மௌனித்தனர்.
புலம்பெயர் தமிழ் மக்கள் விடை தெரியாத பல கேள்விகளுடன் வாழ்கின்றனர். அவற்றில் முக்கியமான ஒன்று புதிய சர்வதேச விதிமுறை ஈழத் தமிழரின் வெளிப்புற மற்றும் உள் சுயநிர்ணய உரிமைகளை மறுக்கிறதா என்பதுதான். சமாதானத்தையும் அமைதியையும் ஒற்றுமையையும் கொண்டுவருவதற்குப் பதிலாக, சர்வதேச சமாதானச் செயல்முறையானது, 2009 ஆம் ஆண்டு தமிழர் தாயகத்தில் கண்ணியமான நீதியான சமாதானக் கனவுகளுக்கு முற்றிலும் நேர்எதிராக இருந்தது. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப் பட்டனர். மற்றும் போர் முடிந்த பின் ஆயிரக்கணக்கான போர் கைதிகள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். தமிழ் நினைவுகள் மற்றும் புனிதக் கல்லறைகள் உட்பட போராட்டத்தின் அனைத்து தடயங்களும் போர் முடிந்த பின் அழிக்கப்பட்டன. இவ்வாறாக தமிழீழ நடைமுறை அரசை அழித்து, தமிழீழ விடுதலைப் புலிகளை ஒழித்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந் நிலையில், சர்வதேச சமூகத்தால், புலிகள் மீதான தடை, தொடர்ந்தும் புதுப்பிக்கப்பட்டு நடைமுறையில் வைத்திருப்பதன் நோக்கத்தைப் பற்றிய பல கேள்விகளைத் தூண்டுகிறது.
இலங்கையின் தமிழ் இனப்படுகொலையிலிருந்து தப்பிய தமிழர், அண்மைச் தசாப்தங்களில் மேற்கத்திய நாடுகளில் குடியேறினர். 2009 ஆம் ஆண்டு முதல், இனப்படுகொலையானது, நினைவழிப்பு, நிலஅபகரிப்பு, போன்ற பல புதிய வடிவங்களில் தொடர்கிறது, மேலும் கடந்த 12 ஆண்டுகளில் சிங்களர் குடியேற்றத்தால் தமிழர் அதிக நிலத்தை இழந்தனர். 2009 ஆம் ஆண்டு முதல், புலிகள் மீதான தடையை கனடா ஐந்து முறை மதிப்பாய்வு செய்து புதுப்பித்து, புலம்பெயர் தமிழர்களை இகழும் இச் செயலானது தமிழ் மக்களின் கோபத்துக்கு உள்ளாகிறது . 2020 ஆம் ஆண்டில், பிரிட்டனின் தடைசெய்யப்பட்ட நிறுவனங்களின் மேல்முறையீட்டு ஆணையம், புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யும் உள்துறை அலுவலக முடிவு “குறைபாடுடையது” என்றும் சட்டவிரோதமானது என்றும் கண்டறிந்தது.
இனப்படுகொலையைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தும் இலங்கை போன்ற அரசாங்கங்கள் இனப்படுகொலை குற்றங்களைச் செய்யச் ஊக்குவிக்கப்படும் அதேநேரம், விடுதலைப் புலிகள் மீதான தொடர்ச்சியான தடையானது, 9/11 க்குப் பிந்தைய காலத்தில் பயங்கரவாதிகள் என்ற அவப்பெயரால் களங்கத்தை உணரும் பெரும்பான்மையான புலம்பெயர் தமிழர்களின் அரசியல் நடவடிக்கைகளை ஒடுக்குகிறது.
கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் அமைப்புகளுடனான ஒரு மகாநாடு, இந்த முக்கியமான பிரச்சினையை ஆராயும் என்று நாம் உறுதியாக நம்புகிறோம். இந்தப் பின்னணியில், மேலே குறிப்பிட்ட பிரச்சனைகள் தொடர்பான ஒரு மகாநாட்டை பெப்ரவரி 18, 19, 2022 அன்று நடைபெற ஒழுங்கு செய்திருப்பதை அறியத் தருகிறோம்.
தமிழ் அரசியல் உரிமைகளுக்கான கூட்டமைப்பு இந்த மகாநாட்டை ஏற்பாடு செய்கின்றது.
செப்டம்பர் 8, 2021 நிலவரப்படி இந்த மாநாடு கூட்டணியின் உறுப்பினர்கள்:
1. Tamil Genocide Memorial (TGM) தமிழின அழிப்பு நினைவகம்
2. Quebec Tamil Development Association (QTDA) கியூபெக் தமிழர் முன்னேற்றச்சங்கம்
3. Ottawa Tamil Association (OTA) ஒட்டாவா தமிழ் ஒன்றியம்
4. Canadian Tamil Coalition for Justice and Accountability (CTCJA) கனடா தமிழ் அமைப்புக்களின் நீதிக்கான கூட்டமைப்பு
5. Tamil Rights Group (TRG) தமிழர் உரிமைக்கான குழுமம்
6. United Tamil Solidarity Front (UTSF) ஐக்கியத் தமிழர் கூட்டுப்பொறுப்புணர்வு முன்னணி
7. Tamil Canadian Centre for Civic Action (TCCCA) தமிழ்க் குடிமைச் செயலியக்கம்
8. The Delft People Cultural Organization Of Canada – நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடா